28.5.07

சுவாசத்தின் மகத்துவம்

நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள். உங்கள் உள்ளே பேரானந்தத்தை உணரக்கூடிய சாத்தியம் இருக்கிறது. இந்த மூச்சு உங்களுள் வந்துபோவதால் நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். அது எவ்வளவு விலைமதிக்கத்தக்கது? எவ்வளவு முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது? அது எவ்வளவு அற்புதமானது?

எந்தவொரு முயற்சியுமின்றி நாம் சுவாசிப்பதால் அதன் மதிப்பையும் உயிரோடு இருப்பது எவ்வளவு அற்புதமானது என்பதையும் நாம் மறந்து விட்டோம். இந்த மூச்சு நம்முள்ளே வந்துபோய் கொண்டிருந்தபோதும் இப்படி ஒரு பொக்கிஷம் நம்முள்ளே இருப்பதை நாம் அறிந்ததேயில்லை. வாழ்நாள் முழுவதும் அதன் மகத்துவத்தை கண்டுகொள்ளாமலேயே இறந்துவிடுகிறோம்.

இவ்வுலகில் நம்மிடம் உள்ள சொத்துகள் எல்லாம் பெருமதிப்பு வாய்ந்த பொக்கிஷம் என நாம் கருதிவிட முடியாது என்பதை பலரும் ஒப்புகொள்வீர்கள். பொக்கிஷமாக கருதும் சிலவற்றை வங்கியில் சேமித்து வைக்கமுடியாது. அன்பு, ஆரோக்கியம் மற்றும் குடும்பம் போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை. நிச்சயமாக அந்த பட்டியலில் மூச்சு மிகவும் விலைமதிக்க முடியாத ஒன்று. உண்மையாகச் சொல்லப்போனால் இந்த மூச்சு இல்லாமல் நாமா?

மகராஜி கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக அடிப்படையான ஒரு பொக்கிஷம் நம்மிடம் இருப்பதை பற்றி உரையாற்றி வருகிறார். நமக்கு கிடைத்திருக்கும் இந்த உயிர்தான் விலைமதிக்க முடியாத சொத்து என எடுத்துரைக்கிறார்.

“நாம் உயிரோடிருப்பதால் நமக்கு கிடைத்திருக்கும் பாக்கியத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வாழ்வு நல்லவை கெட்டவை என்பதைப் பற்றியதல்ல. இது உயிரெனும் பாக்கியத்தைப் பெற்றிருப்பதைப் பற்றியது.”

“இந்த சுவாசம்தான் மாபெரும் அதிசயம். வந்து போகும் இந்த சுவாசம் நம்முடைய நல்லவை கெட்டவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. இது அனைத்தையும் கடந்து செல்கிறது. நமக்கு உயிர் எனும் சக்தியைக் கொடுக்கிறது. அது நம்முள் வந்து நம்மைத் தொடுவதால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உயிரோடு இருப்பதனால் இவ்வுலகில் மற்ற எல்லா விஷயங்களும் இருக்கின்றன,” எனக் கூறுகிறார்.

இந்தியாவில் பிறந்து வளர்ந்த மகராஜி அவர்கள் தனது 13-வது வயதிலேயே உலக முழுவதும் பிராயணம் செய்யத் தொடங்கினார். 20 பேர் கொண்ட சிறு கூட்டமாயினும் லட்சக்கணக்கான மக்கள் கூட்டமாயினும் அனைத்து கண்டங்களிலும் உரையாற்றி வருகிறார். அதில் அரசாங்க பிரமுகர்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள் மற்றும் பாமர மக்களாக இருப்பினும் எப்பொழுதும் அவரின் செய்தியின் கருப்பொருள் ஒன்றேதான். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொண்டு உரையாற்றுகிறார்.

“இந்த சுவாசத்தின் மகத்துவத்தை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன்,” என்கிறார்.

உயிரோடு இருப்பதன் அதிசயத்தைப் பற்றி எடுத்துரைப்பதோடு அல்லாமல் ஞானவழிமுறை எனும் அன்பளிப்பின் வழி நாம் யார் என்பதை அறிவதற்கான முறையை காண்பித்து கொடுக்கிறார்.

ஞானவழிமுறை கொண்டு வரும் அனுபவம் புதிதான ஒன்றல்ல. அது ஏற்கனவே நம்மிடம் உள்ளது. ஆனால் நாம் மறந்துவிட்டோம் என தெளிவுப்படுத்துகிறார். கவனிக்கப்படாமல் இருக்கும் நம்முடைய அந்தவொரு அம்சத்தை கண்டுகொள்ளுமாறு மக்களுக்கு ஊக்கமளிக்கிறார்.

அதிசயம் என்பதை இந்த உலகம் எவ்வாறு புரிந்துக்கொண்டுள்ளது? எதை நாம் அதிசயம் என்கிறோம்? எதை நாம் மறந்துவிட்டோம்? எது உண்மையிலேயே அதிசயம்?

இந்த மூச்சு உங்களுள் வந்துபோவதுதான் மாபெரும் அதிசயமாகும். இந்த அதிசயம்தான் இரவும் பகலும் உங்களுள் தானாகவே இயங்கிகொண்டிருக்கிறது. ஆனால் நம்மால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. நமது அன்றாட அலுவல்களிலும் காரியங்களிலும் மற்றும் உரையாடல்களிலும் இதை முற்றிலும் மறந்து விடுகிறோம். உங்களின் இறுதி மூச்சை எடுப்பதற்காக போராடும் பொழுதுதான் உண்மையான அதிசயம் எது என்பதை புரிந்துகொள்வீர்கள்.

சீராக வந்து போய்கொண்டிருக்கின்ற இந்த மூச்சினால்தான் உங்களால் அனைத்தையும் செயலாற்ற முடிகிறது என்பதை நீங்கள் நிச்சயமாக கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த மூச்சு சீராக இல்லாவிட்டால் மற்ற அனைத்தும் சீர்குலைந்துபோய்விடும். ஒவ்வொரு மூச்சிலும் ஓர் இசைமீட்டப்படுகிறது. அந்த சாத்தியத்தை உணர விழிப்புணர்வோடு இருங்கள்.

இவ்வுலகில் மற்ற எல்லாவற்றுக்கும் நீங்கள் ஏதாவது பிரதியுபகாரம் செய்ய வேண்டியுள்ளது. அது உங்கள் முயற்சியாகவோ பணமாகவோ அல்லது உங்கள் நேரமாகவோ இருக்கலாம். மற்றவையெல்லாம் உங்களுக்கு செலவை உருவாக்கக்கூடியவை. ஆனால் இந்த மூச்சு வருகிறது. உங்களுக்கு தொடர்ந்து கொண்டு வருகிறது. அது எதைக் கொண்டு வருகிறது? அது ஆனந்தத்தைக் கொண்டு வருகிறது. உங்களுக்கு அழகைக் கொண்டு வருகிறது. உங்கள் வாழ்வில் அருளைக் கொண்டுவருகிறது. பெரும் பொக்கிஷமான சக்திவாய்ந்த இந்த உயிரைக் கொண்டு வருகிறது.

தரை இறக்கல்: PDF