மகராஜியைப் பற்றிய ஓர் அறிமுகம்
“ நாம் எதை தேடுகின்றோமோ அந்தவொன்று நம்முள்ளேயே இருக்கிறது. நாம் அதை சந்தோஷம் என்று அழைக்கலாம், அமைதி என்று அழைக்கலாம், அல்லது உண்மையான அன்பு என்றும் அழைக்கலாம்.”
நாம் அனைவருமே நம் சொந்த வழியில் உள்ளத்தில் நிறைவை தேடுகின்றோம். ஆயினும், நிறைவை தேடுவது என்பது எல்லோருக்கும் பொதுவானதே. நிறைவடைய வேண்டும், திருப்தியடைய வேண்டும் என்ற தேவை, நம் அனைவருக்கும் இயல்பாகவே உள்ளது. ஆனால், எவ்வாறு நாம் இதனை அடைவது? உண்மையிலேயே நாம் நிறைவை அடைகின்றோமா, அல்லது சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக அமையும் போது மட்டும்தான் நாம் சந்தோஷமாக இருக்கின்றோமா?
மகராஜி தனது பணியை இந்தியாவில் தொடங்கினார். வாழ்க்கையில் நிறைவாக இருக்கவேண்டும் என்பது இந்தப் பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உள்ள அடிப்படையான விருப்பமாகும். இந்த விருப்பதை நிஜமாக்குவதற்கு ஒரு விசேஷமான வழியை அவர் வழங்குகின்றார். அதனை ஞானவழிமுறை என்று அழைக்கின்றார். ஆர்வமுள்ளவர்களுக்கு உள்ளிருக்கும் அமைதியோடு தொடர்புகொள்ள அவர் வழங்கும் ஞானவழிமுறையின் நான்கு பயிற்சி முறைகள் உதவுகின்றன. உண்மையான ஆர்வமும் பயிற்சி செய்வதற்கான பிடிமானமும் கொண்டவர்கள் யாராக இருப்பினும் இந்த உன்னதமான உணர்வை அனுபவிக்க முடியும் என்று கூறுகின்றார்.
மகராஜி இச்செய்தியை வழங்கும் முதல் நபரல்ல. அவருக்கு முன்பே அவரின் தந்தை உட்பட பலரும் இதை செய்திருக்கிறார்கள். ராஜ பரம்பரையில் பிறந்த இவருடைய தந்தையான ஸ்ரீ ஹான்ஸ் ஜி மகராஜ் அவர்கள் இந்தியா முழுவதும் இச்செய்தியை வழங்கி வந்தார். தற்போது 88 நாடுகளில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மனநிறைவையும் சந்தோஷத்தையும் அடைவதற்கு மகராஜியின் உரையை செவிமடுத்து வருகிறார்கள். அவரின் இந்த செய்தி 60 மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது.
மகராஜி இந்தியாவில் உள்ள ஹரிட்துவார் எனும் நகரில் 1957-ல் பிறந்தார். அவருக்கு மூன்று வயதாக இருந்தபோதே தன் தந்தையார் உரையை செவிமடுக்க வந்திருந்த பெரும் கூட்டத்தில் உரையாற்றத் தொடங்கினார். அவரது தந்தையாரின் மறைவுக்குப் பிறகு, எட்டு வயது நிரம்பிய மகராஜி இச்செய்தியை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
தனது இளம் வயதிலிருந்தே இந்தியாவில் பெரிய கூட்டங்களில் தொடர்ந்து உரையாற்றி வந்தார். தமது 13-வது வயதில் லன்டனிலும் லோஸ் எஞ்லஸ்சிலும் உரையாற்ற அழைக்கப்பட்டார். டெல்லியில் மூன்று லட்சம் மக்களாக இருந்தாலும், கோலாலம்பூரில் இரண்டாயிரம் மக்களாக இருந்தாலும், அல்லது பேங்கோக்கில் ஐ.நா மண்டபத்தில் இருநூறு பேராக இருந்தாலும் அவர் உலகில் வாழும் எல்லா தரப்பிலும் உள்ள மக்களின் நாடு, இனம், மதம் மற்றும் கலாச்சார பேதம் பாராமல் உரையாற்றி வருகின்றார்.
மிகவும் உன்னதமான ஒன்றைப் பற்றி எளிமையாக உரையாற்றுவதற்கு அவரிடம் ஒரு விசேஷத்தன்மை இருக்கிறது. பலதரப்பட்ட மக்களின் உள்ளத்தை தொடவும் அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அவருடைய செய்தியை எளிமையாக வைத்திருப்பதும் அவரின் ஆற்றலாகும்.
“நான் மக்களிடம் வெறும் வார்த்தைகளை மட்டும் கூறவில்லை. ஆனால் அகத்தினுள்ளே கவனத்தை திருப்பி அங்கிருக்கும் அழகை அனுபவிக்க ஒரு வழியையும் கற்றுகொடுக்கின்றேன். நான் அந்த அழகை உருவாக்கவில்லை. இது வெரும் கற்பனையல்ல, எண்ணங்களினாலும் வருவதல்ல. இது உங்கள் உள்ளேயே இருக்கிறது. உள்ளிருக்கும் அந்த உணர்வோடு தொடர்பை ஏற்படுத்தும் ஒரு செயல்முறையான வழி இல்லாவிட்டால், என் வார்த்தைகள் அர்த்தமற்றதாகிவிடும்,” என்று மகராஜி கூறுகின்றார்.
அவரின் செய்தியால் கவரப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தாலும், சிரமம் பாராமல் அவர் தொடர்ந்து மேலும் பல இடங்களுக்குச் சென்று உரையாற்றி வருகின்றார். பலவிதமான பதிப்பீடுகள், இணையதளங்கள், சீடிக்கள், வீசிடிக்கள், டிவீடிக்கள், அனைத்துலக நிகழ்ச்சிகள் மற்றும் துணைக்கோள நிகழ்ச்சிகள் வாயிலாக மக்கள் அவருடைய செய்தியை அறிந்துகொள்கிறார்கள்.
தரை இறக்கல்: PDF