28.5.07

ஆனந்தத் தருணம்

வாழ்க்கையில் எம்மாதிரியான சவால் முழுமையான நிறைவை தரவல்லது? இமய மலையை ஏறுவதா, பிரான்ஸ் நாட்டு நெடுதூர சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெறுவதா, நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பத்து வினாடிகளில் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் ஓடி முடிப்பதா? அல்லது இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்தையும் இன்பமாக அனுபவிப்பதா?

மகராஜியை பொருத்தவரையில், ஒவ்வொரு தருணத்தையும் இன்பமாக அனுபவிப்பதுதான் உள்ளத்தில் நிலையான நிறைவை அளிக்கிறது. எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய நிரந்திரமற்ற திருப்திக்காக காத்திருப்பதைப் பற்றியதல்ல. ஆனால் ஒவ்வொரு தருணத்தையும் இன்பமாக அனுபவிப்பதற்கான ரகசியம் “இப்பொழுது எனும் இத்தருணத்தில்தான்” புதைந்துக்கிடக்கிறது எனக் கூறுகிறார்.

“இத்தருணம் என்பதில்தான் ஏகாந்தமான ஓர் உணர்வு அடங்கியிருக்கிறது. அங்கு ஆனந்தம் இருக்கிறது. ஏதோவொரு காரணத்தினால் வருகின்ற ஆனந்தமல்ல. ஆனால் ஏற்கனவே அங்கு குடிகொண்டிருக்கும் ஆனந்தம். ஏனென்றால் அதுதான் நம்முடைய இயல்பான தன்மை. ஈடில்லா ஓர் ஆனந்தம் நம்முள்ளே கண்டுணரப்படுவதற்காக காத்திருக்கிறது. நம் வாழ்வில் இருக்கின்ற அறியதோர் சாத்தியம் இதுதான்,” என்கிறார்.

கடந்த பல வருடங்களாக மகராஜி உலக முழுவதும் பிரயாணம் செய்து மக்களுக்கு தங்கள் உள்ளே ஆனந்தத்தை அடைவதற்கான சாத்தியம் இருப்பதை கண்டுணரக்கூடிய ஒரு வாய்ப்பை வழங்கி வருகிறார்.

நீங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் நாளைய பொழுதுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், உண்மையிலேயே அதுதான் நிச்சயமில்லாதது. உங்களுக்கு நிச்சயமாக இருப்பது இத்தருணம் மட்டுமே. இத்தருணத்தின் சீரான தன்மையினால்தான் நீங்கள் வாழ்கிறீர்கள். இதுதான் உண்மை. இத்தருணம்தான் பரிபூரணமானது. இத்தருணத்தில் அனுபவத்திற்கு இடமுண்டு, எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் அல்ல. அங்கு எண்ணங்கள் வருவதில்லை, அங்கு துன்பங்கள் வருவதில்லை, அங்கு மனக்குழப்பமும் இருப்பதில்லை.

நிகழ்காலம் அல்லது இப்பொழுது என்றழைக்கப்படும் இத்தருணத்தில்தான் நாம் உண்மையாகவே வாழ்கிறோம். வெரும் எண்ணமாகவோ, நினைவாகவோ கற்பனையாகவோ அல்ல. ஆனால், உயிரோட்டமாக இருக்கிறோம். பெரும்பாலும் நம்முடைய எண்ணங்களினாலோ அல்லது ஆசைகளினாலோ இத்தருணத்திலிருந்து நாம் இழுத்து செல்லப்படுகிறோம்.

“இறந்த காலத்தின் கைதியாக இருப்பது எவ்வளவு சுலபம், எல்லோருமே கடந்துபோன நாட்களை நினைத்துக் கொண்டிருக்கிறோம். கடந்துபோன அந்த மாதங்களையும் வருடங்களையும் எண்ணிப் பார்க்கிறோம். அதோடு நழுவவிட்ட வாய்ப்புகளையும், திட்டமிட்டபடி செய்து முடிக்காமல் போன காரியங்களையும் நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அல்லது நம் எண்ணங்களை வருங்காலத்திற்கு சிறகடிக்க விடுகிறோம். நாளைய பொழுது சிறப்பாக இருக்கும், நாளை ஒருகால் நம்முடைய எதிர்பார்ப்புகளும் எண்ணங்களும் நிறைவேறலாம் என எதிர்காலத்திற்கும் கடந்தகாலத்திற்குமாக மனதை அலைபாய விடுவதில் நிகழ்காலத்தை முற்றிலும் மறந்து போய்விடுகிறோம்,” என்று கூறுகிறார்.

ஒவ்வொரு நாளும் ஆனந்தத்தை அனுபவிப்பது அவசியம் என்பதுதான் உலகெங்கும் உரையாற்றி வரும் மகராஜி வழங்கும் செய்தியின் கருப்பொருளாகும். தொடர்ந்து நிலைமாறி வரும் இவ்வுலகில் நிலையாக இருப்பது அந்தவொரு பொருள்தான், உள்ளே இருக்கும் ஆனந்தத்தைத் தவிர மற்றவையெல்லாம் மாறக்கூடியவை. அவை மாறும், அதுதான் அதன் இயல்பு. ஆனால் நாமோ அவை மாறாமல் அப்படியே இருப்பதற்கு எண்ணற்ற முயற்சிகளை எடுக்கிறோம். அதில் எந்த பலனுமில்லை.

இயற்கைக்கு புறம்பாக நாம் எதையும் செய்ய முடியாது. திருப்தியாக இருக்கவேண்டும், சந்தோஷமாக இருக்கவேண்டும் நிறைவாக இருக்கவேண்டும் என்ற ஏக்கம் மட்டும்தான் இந்த வாழ்வில் மாறாமல் இருக்கும் ஒரே விஷயம். நம்மால் இதை ஏற்றுகொள்ள முடிந்தால் நம்முள்ளே இருக்கும் அந்த உந்துசக்தியை புரிந்துகொள்ள முடிந்தால், நடக்கின்ற விஷயங்களுக்கப்பால் அற்புதமான ஒன்றை நம்முள்ளே கண்டுகொள்வோம்.

மகராஜி குறிப்பிடும் இந்த ஆனந்தம் ஏற்கனவே நம்முள்ளேயே இருக்கிறது. இது புதிதான ஒன்றல்ல. ஆனால் இந்த ஆனந்தத்தைப் பற்றி நாம் அறியாமல் இருந்துவிட்டோம்.

ஆனந்தமும் அமைதியும் இத்தருணத்திலும் உங்கள் உள்ளேதான் இருக்கிறது. ஆனந்தத்தின் ஊற்றும் நம்பிக்கையின் ஊற்றும் உங்கள் உள்ளேதான் இருந்து வருகிறது. அதை நீங்கள் இன்னும் அறியாமல் இருக்கிறீர்கள், அவ்வளவுதான்.

தரை இறக்கல்: PDF